My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Friday, August 21, 2015

ஏலியன் குழந்தைகள்?....


Print Friendly and PDF


இங்கிலாந்தில் 12ஆம் நூற்றாண்டுகளில் நடந்த ஒரு நிகழ்வு செவிவழிச்செய்தியாக உலவியது,அதனை வரலாற்று ஆய்வாளர்களான William of newburg மற்றும் Ralph of coggeshall தங்களது புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

12ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலுள்ள ஊல்பிட்(WOOLPIT) எனும் கிராமத்தில் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் வரப்பில் நின்று கொண்டிருந்த இரு விசித்திரமான குழந்தைகளை கண்டனர்.ஒன்று ஆண் இன்னொன்று பெண் குழந்தை.அக்குழந்தைகள் இருவரின் உடலும் பச்சை நிறத்தில் இருந்தது,அவர்கள் உடையும் விசித்திரமாக இதுவரை பார்க்காதது போல் இருந்தது.அவர்கள் பேசும் மொழியும் புதுமையாக இருந்தது.

அவர்களை அந்நிலத்தின் உரிமையாளர் வீட்டுக்கு கூட்டிச்சென்றனர்.அங்கு பலவகையான உணவை கொடுத்தும் எதையும் அவர்கள் உண்ணவில்லை.ஆனால் பீன்ஸ் விதைகளை கொண்டு வந்ததும் அதை மட்டும் அள்ளி தின்றனர்.பல மாதங்களாக பீன்ஸை மட்டுமே உண்டனர்.

கொஞ்ச நாட்களில் பையன் நோய்வாய்ப்பட்டு இறந்தான்.பெண் குழந்தை சாதாரண மக்களுடன் வாழப் பழகியது.பிற உணவுகளையும் உண்ண ஆரம்பித்தது,கொஞ்ச காலத்தில் அதன் தோல் சாதாரண மனிதர்களைப் போல மாறத் துவங்கியது. 
ஆங்கிலமும் பேசப் பழகியது.அதன் பின்னர்தான் தாங்கள் எங்கிருந்து வந்தோம் எனக் கூறியது,தாங்கள் பாதாள உலகில் இருந்ததாகவும்,அங்கே பச்சை மனிதர்கள் இருந்ததாகவும் கூறியது. 
மேலும் அங்கு மங்கிய வெளிச்சமே வரும் பிறகு தானும் சகோதரனும் ஒரு மணி போன்ற ஒளியையும்,இசையையும்' கேட்டு ஒரு குகை வழியே வந்தபோது இந்த ஊல்பிட்டை பார்த்ததாகவும் சூரிய வெளிச்சம் மற்றும் சுற்றுப்புறத்தின் பிரகாசத்தில் தங்கள் கண்கள் சிறிது நேரத்திற்கு தெரியவில்லை என அவள் நினைவிலிருந்த சில விஷயங்களை கூறினாள். 
அவளுக்கு அவள் பெற்றோர் யார் என்பது பற்றிய நினைவுகள் ஏதும் இல்லை.அவள் அவ்வூரிலேயே ஒருவரை திருமணம் செய்து கடைசி வரை வாழ்ந்தாள் என்கிறார்கள்.

இதைப் பற்றி கூறும்போது சிலர் இவர்கள் பாதாள உலகின் குழந்தைகள் என்கின்றனர்.வேறு சிலரோ ஊல்பிட் கிராமத்தில் உள்ள குகை வேறு பிரபஞ்சத்திற்கு செல்லும் வழி,இவர்கள் வேற்றுலகத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டுமென்கின்றனர்.

ஒருவேளை இவர்கள் ஏலியன்-மனிதன் கலப்பில் பிறந்த குழந்தைகளாக இருக்கலாம் என்பது என் கருத்து.

எது எப்படியோ இது ஒரு விளங்க முடியாத மர்மம்தான்.