My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Wednesday, October 15, 2014

திருமண வாழ்க்கை - 10 பொருத்தம் பார்ப்பது ஏன் ?




திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.
அதென்ன பத்து பொருத்தம்?
ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள்.
நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா?
1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.
5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.
8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.
9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.
10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.
இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.
பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.
பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.

Monday, October 6, 2014

ஆவி சந்தித்த ஆவி..!

ஆவி, பேய், பூதம் எல்லாவற்றையும் வெறும் கற்பனை கதாபத்திரங்களாகவும், காமெடி பீஸுகளாகவும் தான் எப்போதுமே நான் பார்த்திருக்கிறேன், இந்த சம்பவம் என் வாழ்வில் நடக்கும் வரை.. 
அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம். ப்ராஜக்ட் ரிப்போர்ட் பிரிண்டிங்கிற்கு கொடுத்திருந்தோம். மற்ற நண்பர்கள் வேறு வேலைகளில் பிஸியாகிவிட எங்க டீமோட ரிப்போர்ட்டை பிரிண்ட் செய்து வாங்கி வரும் கடமை என் தலையில் விழுந்தது. இதற்காக நான் எங்கள் கிராமத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த கோவைக்கு செல்ல வேண்டியிருந்தது. அடுத்த நாள் விரிவுரையாளரின் ஒப்புதலுக்கு கொடுக்க வேண்டியிருந்ததால் இரவு நெடு நேரமாகிவிட்ட போதும் அங்கேயே இருந்து வாங்கி வர முடிவு செய்தேன்.

இரவு பன்னிரெண்டரை ஆன போது ஒரு வழியாக பிரிண்டிங் முடித்து எல்லாவற்றையும் என் புத்தகப் பையில் திணித்துக் கொண்டு மானசாவுடன் ( என்னுடைய ஸ்ப்ளெண்டர் ) கிளம்பத் தயாரானேன். வண்டியின் டிஸ்ப்ளே பேனலை பார்த்தேன். பெட்ரோல் E க்கு மிக அருகில் இருந்தது. அப்போது தான் வரும்போதே பெட்ரோல் ரிசர்வ் விழுந்ததும், மீண்டும் பெட்ரோல் போட மறந்ததும் நினைவுக்கு வந்தது. இருந்த போதும் வீடு திரும்பும் வரை தாங்கும் என்ற நம்பிக்கையோடு வண்டியை கிளப்பினேன்.

புறப்பட எத்தனித்த போது மாலையில் என் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. " சீக்கிரம் திரும்பி வந்துடுடா.. ரொம்ப நேரம் பண்ணிடாதே. வண்டிய வேகமா ஒட்டாதே..பூலுவபட்டி தாண்டி வரணும். லேட் பண்ணிடாதே" என்றார். பூலுவபட்டி என்பது மயானங்கள் நிறைந்த ஒரு கிராமம். சுமார் அரைக் கிலோமீட்டருக்கு கல்லறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். மேலும் அங்கே ஒரு எட்டு மணி சுமாருக்கு மேல் ஆள் நடமாட்டமும் குறைவாக இருக்கும். பொதுவாக இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் கூட்டம் கூட்டமாகத்தான் செல்வார்கள். எனக்கு என் மேல் இருந்த மன தைரியத்தில் நான் கிளம்பினேன்.

வழக்கமாக ஏதாவது ஒரு சினிமா பாடலை முணுமுணுத்துக் கொண்டே வண்டி ஓட்டுவது என் வழக்கம். அன்றும் அதே போல் பாடிக் கொண்டே வண்டியை செலுத்தினேன். என்னவோ தெரியவில்லை அன்று என் வாயில் வந்த பாடல்கள் எல்லாம் "வேதாளம் வந்து நிக்குது" "நானே வருவேன்" " வானுயர்ந்த சோலையிலே" போன்ற பாடல்கள். இப்படியே பாடிக் கொண்டு மாதம்பட்டி எனும் இடத்தை அடைந்தேன்.. இந்த இடத்திலிருந்து முன்பு கூறிய பூலுவபட்டி முடியும் வரை தெருவிளக்கு கிடையாது.

வண்டியின் ஹெட்லைட் மட்டும் உதவ ( அன்று அமாவாசை தினம் வேறு) என் பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று வண்டி இஞ்சின் அடைப்பது போன்ற ஒலியுடன் திக்கி திக்கி நின்று விட்டது. இருமுறை கிக்கரை உதைத்தும் பயனில்லை. வண்டி ஸ்டார்ட் ஆவது போல் தெரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன், நான் பூலுவபட்டியை நெருங்க சிறிது தொலைவே இருந்தது. என்னையும் அறியாமல் ஏதோ ஒரு பயம் மனதுக்குள் உரச, சில்லென்ற இரவு நேரத்திலும் என் நெற்றியில் வியர்வைப் பூக்கள்.

வண்டியை விட்டிறங்கி வண்டியை மெல்ல சாய்த்தேன். இப்போது சோக்கை(Choke ) போட்டு வண்டியை உதைத்ததும் வண்டி ஸ்டார்ட் ஆனது.. சற்று தூரம் கடந்ததும் தொலைவில் யாரோ நிற்பது போலவும், லிப்ட் கேட்பது போலவும் எனக்குத் தோன்றியது. மிகவும் இரவு வேளையாதலால் இதற்கு மேல் பேருந்து போக்குவரத்தும் கிடையாது. நடந்து போவதும் இந்த இருட்டினில் இயலாத காரியம். ஆதலால் அங்கே நிற்கும் நபருக்கு உதவி செய்வது எனத் தீர்மானித்தேன், மேலும் என் வழித்துணைக்கு ஒருவர் கிடைத்த சந்தோசம் வேறு.

அவர் அருகில் சென்று வண்டியை நிறுத்திய போதுதான் அவரை கவனித்தேன். ஆறடி ஐந்து அங்குலம் உயரம் இருக்கும். கருப்பான தேகம். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடனும் கையில் ஒரு மஞ்சள் பையுடனும் நின்றிருந்தார். அவரிடம் " எங்க போகனுண்ணா" என்று கேட்டேன்.. அதற்கு அவரோ "இருட்டுப் பள்ளம்" என்றார். அவரது குரல் கடுமையாகவும், அதே சமயம் இரண்டு பேர் பேசினால் வரக்கூடிய ஒருவித சப்தத்துடனும் ஒலித்தது. " நான் ஆலாந்துறை வரைக்கும் தான் போவேன். அங்கே நீங்க இறங்கிக்கோங்க" என்றபடி அவரை பின்னால் ஏற்றிக்கொண்டு வண்டியைக் கிளப்பினேன். அங்கிருந்து பல கேள்விக் கணைகளை அவரிடம் தொடுத்தேன். நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. நான் திரும்பிப் பார்த்த போது அவர் கண்கள் மிகவும் சிவந்து இருந்தது போல் எனக்குத் தோன்றியது. சரி அவர் அதிகம் உரையாட விரும்பவில்லை போலும் என எண்ணிக் கொண்டு நான் பேசுவதை நிறுத்திவிட்டேன். வண்டி இப்போது பூலுவபட்டியை தாண்டிக் கொண்டிருந்தது.

நான் எப்போதும் என் பின்னால் உட்காருபவர்களின் எடையை வண்டியின் இழுவையை வைத்து தீர்மானித்துவிடுவேன். ஆனால் அன்றோ வழக்கத்துக்கு மாறாக பின்னால் ஒரு ஆள் உட்கார்ந்திருப்பதற்க்கான எந்த ஒரு அறிகுறியுமே எனக்கு தென்படவில்லை. அவ்வளவு உயரமான ஆள் நிச்சயமாக நல்ல எடையுடன் இருக்க வேண்டுமென்பது என் அனுமானம், இப்படி யோசித்துக் கொண்டே என் ஊரான ஆலந்துரையை அடைந்தேன். வண்டியை மெதுவாக நிறுத்திவிட்டு அவரிடம் "அண்ணே, நீங்க இங்க இறங்கிக்கோங்க.. என் வீடு பக்கத்துலதான்" என்றபடி பின்னால் திரும்பிப் பார்க்க பின்னிருக்கை வெற்றிடமாய்க் காட்சியளித்தது. நெற்றியில் மீண்டும் வியர்வை அரும்பத் தொடங்க, வண்டியை வேகமாக வீட்டை நோக்கி செலுத்தினேன்.

வண்டியை வாசலிலேயே நிறுத்திவிட்டு வீட்டின் கேட்டை எட்டிக் குதித்து உள்ளே சென்றேன். மனம் முழுவதும் இப்போது என் பின்னால் அமர்ந்திருந்தவரின் உருவமே வியாபித்திருந்தது.. அவருக்கு கால்கள் இருந்ததா இல்லையா என்று நான் சரியாக கவனிக்கவில்லை. வேகமாக ஓடிப்போய் பூஜையறையில் இருந்து திருநீரை எடுத்து பூசிக் கொண்டேன். மனதிற்குள் கந்தர் சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தேன். இருந்த போதும் அவர் டிஜிட்டல் குரலில் "இருட்டுப் பள்ளம்" என்றது என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. எப்போது உறங்கிப் போனேன் என்றே நினைவில்லை.

காலையில் அம்மா வழக்கம் போல் பெட் காப்பியுடன் வந்து எழுப்ப அவசர அவசரமாக எழுந்து கல்லூரிக்கு புறப்பட்டேன்.. முந்தைய நாள் நிகழ்ந்த சம்பவத்தை தாயிடம் சொல்ல பயந்தேன்.. அவர்களும் பயுந்துவிடுவார்கள், மேலும் அதற்கு மேல் இரவு நேரங்களில் வெளியே செல்ல அனுமதி கிடைக்காது என்பதால் அவரிடம் சொல்லாமலே என் புத்தக பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.. பஸ் ஸ்டாண்ட் கடந்ததும் சட்டென்று வண்டியின் பிரேக்கை அழுத்தி நிறுத்தினேன். என் கண்களையே நம்ப முடியவில்லை. நேற்றிரவு என் பின்னால் அமர்ந்திருந்த அதே நபர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார்.. தலையில் கட்டுடன்..!


Wednesday, October 1, 2014

Ghost story :

இது 2002 இல் நண்பனின் அண்ணனிற்கு நடந்த நிகழ்வு. அவர் பெயர் அகஸ்டின் .. தமிழ்நாடு , கேரளாவிற்கு இடைப்பட்ட எல்லையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2 அம் ஆண்டு விடுதியில் தங்கி பயிலும் பொது ஏற்பட்ட திகில் அனுபவம் ..
அவர்கள் வழக்கமாக சனி இரவு அருகில் உள்ள டவுன் பகுதியில்உள்ள திரை அரங்கில் இரண்டாம் காட்சி படத்துக்கு சென்று வருவது வழக்கமாம் .. படம் முடிந்து அந்த இரண்டு கி.மீ தூரத்தை நடந்தே வந்து விடுதி செருவதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியாம். வரும் வழியில் பார்த்த திரை படத்தினை பற்றிய விவாதங்களுடன் தொடருமாம் பயணம் ..
அந்த வருகின்ற பாதையானது மண் பாதை தானாம் .. இரண்டு புறமும் செடி புதர்குலடன் கூடியதாம் அந்த பாதை.

அன்றும் அப்படி தான் ஒரு திரைப்படத்தினை பார்த்து விட்டு அரட்டைகளுடன் நடந்து வந்துள்ளனர் .. அபொழுது மணி இரவு 2.30 . அதே நேரம் அவர்களின் பின்னால் ஒரு 65,70வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் வந்துள்ளார் .. அவரை பார்த்த மாத்திரத்தில் தெரிந்ததம் அவர் கேரளவினை பூர்விகமாக கொன்றவர் என்பது .. அவரது ஆடையும் அதை உறுதி படுத்தியதாம் .. கையில் ஒரு நடை கோல் உடன் இருந்த அவர் நடையில் கோலின் சத்தம் அதிகமாகவே கேட்டதாம். அந்த அமானுஷ்ய அமைதியில் அவரது அந்த நடை குச்சியின் சப்தம் அதிகமாகவே கேட்டுள்ளது ..
அதை கண்ட என் நண்பனின் அண்ணன் மற்றும் அவர்களின் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி மனதில் எழுந்துள்ளது.
காரணம் ஆளே இலாத மற்றும் அப்பாதையில் கலூரியை அடுத்து வீடோ , ஏன் கலூரி தவிர்த்து கட்டிடம் காண கூட கல்லூரி தாண்டி 3,4 கி.மீ செல்லவெண்டுமம். அப்படி இருக்கையில் இந்த முதியவர் அதுவும் இந்த நேரத்தில் இங்கு நடந்து செல்ல என காரணமாக இருக்கும் என சந்தேகம்.
அதனை ஒருவருக்கு ஒருவர் கேட்டுகொண்டு இருகயிலையே அவர் இவர்களை அழைத்து இருக்குறார் இவர்களை பற்றிய விபரங்களை கேட்டிருகிறார். கல்லூரி பெயரை தவிர அனைத்து விபரங்களையும் பொய்யாகவே சொலி இருக்கிறார்கள் என் நண்பனின் அண்ணனும் அவரின் நண்பர்களும். விபரங்களை கேட்டு விட்டு மணி என்ன எனவும் கேட்டுள்ளர் இவர்கள் மணியினை சொல்ல அவர் சரி என விடைபெற்றுளார்.

இவர்கள் இணை புரியாத அமனுஷ்ய பயத்துடன் நடையின் வேகத்தை கூட்டி நடந்து இருகிறார்கள். 5 அடி தூரம் நடந்து இருபார்கலாம். நண்பரில் ஒருவன் டேய் என அலறி இருக்கிறார். அனைவரும் ஒரு நொடி தூக்கி வாரி போட்டவர்கலாய் திரும்பி பார்க்க. அந்த முதியவர் வந்ததற்கான சுவடே இல்லையாம். அந்த 5 அடி இடைவெளியில் அவர் எங்கும் ஓடி மறைய வாய்ப்பே இல்லை. காரணம் அந்த இடைவெளியில் இருபது. ஒரே ஒரு மரம் மட்டும் தான் மேலும் அந்த இடைவெளியில் உள்ள சாலையின் இடது புரம் சமான பூமி. அவர்களின் பயத்திற்கு எல்லை இல்லாத அந்த தருணம். அவர்களில் ஒருவர் மட்டும் அந்த மரத்திற்கு அருகில் சென்று பார்க்க. 3 ஆணி அடிக்க படிருந்ததை பார்த்திருக்கிறார்.மேலும் மரத்தின் பின் புறம் சிலுவை செருகிய ஒரு மண் குவியல் கட்டாயம் அது ஒருவரின் உடல் புதைக்கப்பட்ட இடம் ... அதற்கு மேல் அவர்கள் அங்கு நேரத்தை செலவுட விரும்பவில்லை விடுதியை நோக்கி 1.5 கி.மீ ஓடியே அடைந்து உள்ளனர் .. அன்று இரவு தூக்கம் எவளவு முயன்றும் வர விஇல்லையாம். அடுத்த நாள் காலை அந்த இடுகாட்டிற்கு சொந்தமுள்ள ஊரினிற்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் இரவு நடந்து வந்தோம் என்று ஆரம்பிக்கும் போதே எவரும் மணி கேட்டனர என அவர்கள் விசாரிக்க துவங்கி விட்டனராம். அவர்கள் திகிலின் உச்சத்திற்கே சென்று விட்டனராம். இது போல் பல முறை அப்பாதையில் பயணிக்கும் நபர்களுக்கு நடதுள்ளதாகவும். மேலும் அவர் அச்சாலையில் விபத்தில் இறந்த ஊரு காரர் என்றும் கூரினர்கலாம். அவர் இறந்த பிறகு அவரின் ஒரே மகன் வெளி ஊருக்கு சென்று விட்டார் என்றும் கூறி உள்ளனர். மிகவும் திகிலான அந்த அனுபவம் இன்று வரை அவர்களுக்கு நினைவில் இருந்து அகலவில்லயாம். அனால் அவரின் முகம் யாருக்கும் சரியாய் நினைவில்லயாம். இதை நண்பர்களிடத்தில் கூற எவரும் நண்பவில்லியாம். மேலும் சில நண்பர்கள் அந்த அனுபவத்தினை பெற அதே போல் அதே நேரம் அங்கு பயணித்தும் உள்ளனர். அனால் அபொழுது எல்லாம் எந்த நபரும் அங்கே இருக்கவில்லையாம் ..

அறிவியல் வளர்ந்த இந்நாட்களில் விடை தெரிய அமானுஷ்யங்கள் உலகத்தின் பல முலைகளில் அரங்கேறி கொண்டு தான் உள்ளது ..

( எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும் .. 
)