My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Monday, March 28, 2016

சென்னையிலுள்ள அமானுஷ்யமான இடங்கள்:


Print Friendly and PDF

உலகமே சுத்தி வர உள்ளூர விட்டுட்டியே பாண்டியா(நான்தான்) அப்டினு மனசு உறுத்துச்சு அதான் இந்த பதிவு,
சென்னையிலுள்ள அமானுஷ்யமான இடங்கள்:
1. வால்மீகி நகர், திருமான்மியூர் :
சென்னையில் பேய் உலவும் இடம் என்று தேடினால் முதலில் வருவது இந்த இடம் தான். எண். F -2 ,#3, செர்வார்ட் சாலை,வால்மீகி நகர், திருவான்மியூர். இந்த விலாசத்தில் உள்ள வீட்டில் தான் பேய் இருக்கிறதாம். சுமார் 10 வருடங்களுக்குமுன், வீட்டு உரிமையாளரின் மகள் தூக்கு போட்டு இறந்து விட்டதாகவும், அதிலிருந்து வீடு பூட்டியே இருக்கிறது என்றும், அந்த வீட்டில் அப்பெண்ணின் ஆவி உலாவுகிறது என்றும் சொல்கின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அவ்வபோது நடுநிசியில் பெண் அழுவது போலவும், அலறுவது போலவும் குரல் கேட்கிறதாம். அந்த வீட்டை கடந்து செல்லும் போது, இரும்பு கதவு தானாகவே திறந்து கொண்டு நம்மை வரவேற்கிறதாம். இதை எல்லாம் தெரிந்த பின்னும், 2008-ல் ஐந்து இளைஞர்கள் அந்த வீட்டில் குடியேறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட சில அசாதாரண நிகழ்வுகளால், வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். இன்றும் அந்த வீடும், அதிலுள்ள மர்மமும் பூட்டியே இருக்கிறது.
2. டி' மாண்டி காலனி, ஆழ்வார்பேட்டை :
ஜான் டி' மாண்டி என்ற 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த போர்த்துகீசிய தொழிலதிபர் உருவாகிய காலனி இது. அவரும் அங்கேயே தங்கி இருந்தாராம். இந்த காலனியில் இப்போது பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பூட்டியே இருக்கின்றனவாம். பல நிறுவனங்கள் அந்த வீடுகளை லீசுக்கு எடுத்து கொண்டதாகவும் சொல்கின்றனர். இரவில் அந்த வழியாக நடந்து யாராவது சென்றால், அவர்கள் பெயரை சொல்லி யாரோ அழைப்பது போலவும், சிரிப்பு சத்தமும் கேட்கிறதாம். இரவில் சாலையை ஜான் டி'மாண்டி கடந்து செல்வதை அப்பகுதிவாசிகள் சிலர் பார்த்துள்ளார்கள். பூட்டிய வீட்டில் இவருடைய ஆவி கதவை திறக்காமலே உள்ளே சென்றதையும் சிலர் பார்த்திருகிறார்கள். ஆள் அரவமற்ற தெருவும், விளக்கில்லாத சாலையும் பார்க்கும் போதே திகிலூட்டுகிறது. டிமாண்டி காலனி படம் வந்த பிறகு சென்னை இளைஞர்களுக்கு இதுதான் ஹாட் பிக்னிக் ப்லேஸ்.
3. கரிக்காட்டு குப்பம், முட்டுக்காடு :
கிழக்கு கடற்கரை சாலையில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியால் இந்த கரிக்காட்டு குப்பம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. அதில் வாழ்ந்த பலரும் இறந்து விட்டனர். மீதம் இருந்த சிலர், ஊரை விட்டே போய்விட்டனர். அந்த சம்பவத்தில் இறந்த ஒரு கிழவனும், இரண்டு குழந்தைகளும் இங்கு ஆவியாய் அலைகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். அங்கு கோவில், பள்ளிக்கூடம், வீடுகள் என்று எல்லாம் இருந்தாலும் மக்கள் யாரும் இல்லாமல் ஒரு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது . அடிக்கடி கிழவனின் ஆவி நிழலாய் தெரிகிறது என அதை பார்த்த சிலர் சொல்கிறார்கள்.
4. பெசன்ட் அவன்யு சாலை, பெசன்ட் நகர் :
பெசன்ட் நகர் தியோசபிகல் அமைப்பு அமைந்துள்ள சாலையை ஒட்டி உள்ள தெரு தான் பெசன்ட் அவன்யு. பகலில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த சாலை, இரவில் பேய்கள் அலைகிறது என்று கூறுகிறார்கள். ஒரு கண்ணுக்கு தெரியாத உருவம், தனியாக வருபவர்களையெல்லாம் பளார் என்று அரைகிறதாம். இருட்டில் யாரும் அந்த பக்கம் போக வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் எச்சரிகிறார்கள்.
5. உடைந்த பாலம், அடையார் :
அடையாரில் கூவம் ஆற்றின் மீது கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட இந்த உடைந்த பாலத்தில் (ப்ரோக்கன் ப்ரிட்ஜ்) இரவு நேரங்களில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக சொல்கிறார்கள். பாலம் அருகே உள்ள ஆள்காட் குப்பத்தில் ஒரு பெண் அலறும் சத்தம் தினமும் கேட்பதாக சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், ஒரு பெண் அப்பகுதியில் கொலை செய்யப்பட்டு இறந்து போனதாகவும், அவள் தான் தினமும் அலறுவதாகவும் கூறுகின்றனர்,
6. சென்னை கிறுஸ்தவ கல்லூரி, கிழக்கு தாம்பரம் :
மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கல்லூரியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் (chemsitry lab) எதோ வித்தியாசமான சப்தங்கள் கேட்பதாக மாணவர்கள் சொல்கிறார்கள். அந்த பாதை வழியாக போகும் போது பூட்டியிருக்கும் ஆய்வகத்தில் யாரோ பேசுவது போலவும், யாரோ புத்தகத்தை படித்து பாடம் நடத்துவது போலெல்லாம் சத்தம் வருகிறதாம். இது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக அக்கல்லூரியில் நம்பப்படும் ஒரு அமானுஷ்ய விஷயமாகும்.
7. சென்னை - புதுச்சேரி சாலை:
சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மர்மமான சில சம்பவங்கள் நடப்பதாக நம்பப்படுகிறது. காரிலோ, டூ-வீலரிலோ வந்து கொண்டிருக்கும் போதும், திடீரென ஒரு வெள்ளை உருவம் கடப்பதாகவும், வேகமாக எதிர்பக்கத்தில் வரும் வாகனம் திடீரென காணாமல் போவதும் மக்களை மேலும் திகிலூட்டுகிறது.
இனிமே இந்த பக்கமெல்லாம் போனா கொஞ்சம் பாத்து போங்க.