ஆதி கால கலங்கரை கோபுரங்களின் உச்சியில், கப்பல்களுக்கு துறைமுகத்தை அடையாளம் காட்டும்விதமாக மகர ஜோதி போல நெருப்பை எரிய விட்டிருக்கிறார்கள். சரி உலகின் முதல் கலங்கரை விளக்கம் எது? கிமு 280ல் அலெக்ஸாண்ட்ரியாவில் கட்டப்பட்ட பரோஸ் லைட்-ஹவுஸ். இருபது ஆண்டுகள் முயற்சியில் கட்டப்பட்ட இது, பழங்கால உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று. இதன் உயரம் 370 அடி. எகிப்தின் அரசர் தலாமி தான் உருவாக்கிய அலெக்ஸாண்ட்ரியா என்ற துறைமுக நகரத்தை ஒட்டியமைந்த ஒரு சிறு தீவில் இதனை உருவாக்கினார். தலாமி வேறு யாருமல்ல மாவீரன் அலெக்ஸாண்டரின் முக்கியத் தளபதி. பேரரசி கிளியோபாட்ராவின் பாட்டன்களின் ஒருவர்.
இப்போது இருக்கும் உலகின் பெரும்பான்மையான லைட்-ஹவுஸ்களின் வயது நூற்றுக்கும் மேல். எத்தனையோ கப்பல்களையும் உயிர்களையும் ஆபத்திலிருந்து கரை சேர்த்த கடவுள் அவை. விளக்கணைந்த பொழுதுகளில் கடலுக்கு பல உயிர்களை பலிகொடுத்த சாத்தான்களும் அவையே. குட்டித் தீவுகளில் கெட்டியாக நிற்கும் ஒற்றை லைட் ஹவுஸின் தனிமையில் ஏராளமான மர்மங்கள் உண்டு. எதனால்?
ஆளில்லா கடற்கரைப் பகுதிகளிலும், தனித் தீவுகளிலும் அமைந்த லைட் ஹவுஸகளைப் பராமரிப்பதற்காகப் பணியாளர்கள் நியமிக்கபட்டிருந்தார்கள். சில லைட் ஹவுஸ்களில் தனியே ஒரே ஒரு பணியாளர் மட்டும் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தவமிருப்பார். ஏதாவது கப்பல்கள் கடந்து சென்றால் மனித முகத்தை பார்க்கலாம். சில இடங்களில் கடற்கொள்ளையர்கள் வந்து லைட் ஹவுஸைச் சேதப்படுத்திவிட்டு, பணியாளரின் உயிரை எடுத்துப் போவதுண்டு. புயல்,மழை சூறாவளிகளில் சிக்கி இறப்பவர்களும் உண்டு. லைட் ஹவுஸைப் பராமரிக்கும் போது அதற்கு பெயிண்ட் அடிக்கும்போது தவறிக் கீழே விழுந்து இறந்த பணியாளர்கள் அதிகம். தனிமையின் துயரம் தாளமல், விரக்தியில் உயரத்தில் இருந்து கீழே குதித்து உயிரை விட்டவர்களும் உண்டு.
செத்துப்போனவர்களுக்கு பிரச்னையில்லை. அடுத்து அதே லைட் ஹவுஸூக்குப் பணியாளராக நியமிக்கப்படும் நபருக்குத்தான் ஆயுள் தண்டனை. செத்துப்போன பழைய ஆள், ஆவியாக அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதாகத் தோன்றும். யாரும் இல்லாமலேயே யாரோ உடனிருப்பதாகத் தோன்றும். கடல் உறங்கும் சமயத்தில் இரவுகளில் எழும் அமானுஷ்ய சப்தங்கள் உயிரைக் குடிப்பதாக அமையும். இம்மாதிரி பயத்தில் செத்துப் போன பணியாளர்களின் நிஜக்கதைகளும் கொட்டி கிடக்கின்றன.
அமெரிக்காவில் Massachusetts பகுதியில் பிளைமெளத் விரிகுடாவில் 1769 ஒரு லைட் ஹவுஸ் கட்டப்பட்டது. இரண்டு கோபுரங்கள் கொண்ட அதனை அண்ணன் ஜானும் தங்கை ஹன்னாவும் பராமரித்தாரகள். ஒரு போரில் கலந்து கொள்ளச் சென்ற ஜான் கொல்லப்பட்டார்.முதல் பெண் லைட் ஹவுஸ் பராமரிப்பாளராக ஹன்னா அதனை பல வருடங்கள் பராமரித்து வந்தார். காலப்போக்கில் பலவித மாற்றங்களை கண்ட அந்த கோபுரங்களில் ஒன்று 1924ல் இடிக்கப்பட்டது. 1986 ல் தானியங்கி லைட் ஹவுஸாக மாற்றப்பட யாரும் அதில் தங்குவதில்லை.
லைட் ஹவுஸ்களைத் தேடி சென்று புகைப்படம் எடுக்கும் லூயிஸ் தன் மனைவியுடன் பிளைமெளத்துக்கு சென்று ஓரிரவு தங்கினார். இரவில் விழித்த அவர் நடுநடுங்கிப் போனார். பதினெட்டாம் நூற்றாண்டு உடையில் ஒரு பெண்ணின் அரூபமான உருவம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. பயத்தில் அவர் அலற மனைவியும் பதறி எழ அந்த உருவம் அப்படியே காற்றில் கலந்தது. பின் லூயிஸ் விடுத்த ஸ்டேட்மெண்ட் அது நிச்சயம் ஹன்னாவாகத்தான் இருக்கக்கூடும் அவள் அந்த லைட் ஹவுஸை விடுவதாக இல்லை.
பூத்பே துறைமுகத்திலிருந்து பத்து மைல்கள் தொலைவிலுள்ள ஸீகுன் maine தீவில் ஒரு லைட் ஹவுஸ் கட்டப்பட்டிருந்தது. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால், யாரும் அங்கு சென்றுவர இயலாது. 1850 இருக்கலாம். அப்போது அங்கே பணி நியமனம் செய்யப்பட்டிருந்த ஒருவர், திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்குச் செல்வதுபோல தன் மனைவியுடன் லைட் ஹவுஸூக்கு சென்று குடியேறினார். யாருமில்லாத தனிமை. பரவசமான பொழுதுகள்.
எல்லாம் சில நாள்களிலேயே வெறுத்துவிட்டது. அந்த மனைவி பொழுதுபோகமல் தவித்தாள். கணவன் அவளுக்காகவே பியானோ ஒன்றை வரவழைத்தான். என்ன பியானாவோடு ஒரே ஒரு பாடலுக்கான நோட்ஸ் மட்டும்தான் வந்தது. பொழுது போகத போதெல்லாம் அந்த ஒரே பாடலையே மீண்டும் மீண்டும் வாசித்தாள். தினமும் அதே பாடல். பியோனோவின் சத்தம் கேட்டாலே கணவனுக்கு கோபம் வர ஆரம்பித்தது.
நிறுத்தப் போகிறாயா இல்லையா....
அவள் காதில் வாங்கவில்லை. கணவன் ஒரு கோடாரியை எடுத்தான். பியானோ மீது பாய்ச்சினான். அந்த செயலை பொருக்க முடியாத மனைவி குறுக்கே பாய்ந்தாள். கோபம் தணிந்து கணவன் தன்னிலைக்குத் திரும்பியபைாது, இரண்டு உடல்கள் அங்கே கிடந்தன, மனைவியும் பியானேவும்.
தன் தவறை உணர்ந்த அந்தக் கணவன் லைட் ஹவுஸின் உச்சத்தில் ஏறி நின்றான். தன் நெஞ்சில் கோடாரியைச் செலுத்தினான். அவன் உடல் அப்படியே தரையே நோக்கி...
இன்றைக்கும் அந்த பியானோவின் இசை எப்போதாவது ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் ஸீகுன் லைட் ஹவுஸைச் சுற்றிப் பார்க்க செல்பவர்கள்.