My Twitter Favorites


பயணங்கள் எப்பொழுதுமே மனிதனை மேம்படுத்துகின்றன ; அவனை உளவியல் ரீதியாக மாற்றுகின்றன...

Saturday, July 25, 2015

உலகை உலுக்கிய விமானகடத்தல்

Print Friendly and PDF

ஜீன் 27 1976. ஞாயிற்றுக்கிழமை. 
4 பாலஸ்தீன மற்றும் 2ஜேர்மன் புரட்சி போராளிகளால் எயார் பிரான்ஸி்ற்கு சொந்தமான எயார் பஸ் 139 எனும் விமானம் கடத்தப்பட்டது. இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து புறப்பட்டு கிறீஸின் எதென்ஸ் விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பாரிஸ் நோக்கி புறப்பட்டது. 

அதில் 256 பிரயாணிகள் சந்தோசமாக பிரயானம் செய்தார்கள் வாழ்கையின் கனவுகளை சுமந்தவாறு. கூடவே 12 விமான சிப்பந்திகளும்.எதென்ஸில் வைத்து மிக நுட்பமாகவும் சமயோசிதமாகவும் தமது துப்பாக்கிகளையும் எறிகுண்டுகளையும் விமானத்தின் உள்ளே ஏற்றிய போராளிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயேவிமானத்தை தமது பரிபூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர். 

லிபியாவின் பெங்காஸியில்எரிபொருளை நிரப்பிக் கொண்டு மீண்டும் உகண்டாவின்என்டபே விமான நிலையம் நோக்கி திசை திருப்பப்பட்டது.விமானம் என்டபேயில் தரையிறங்கியவுடன் அங்கு தயாராக இருந்த பாலஸ்தீனிய போராளிகள் விமானத்தை கடத்திக்கொண்டு வந்த போராளிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். 

பயணிகளை தரையிறக்கி என்டபே விமான நிலையத்தின் பழைய நுளைவாயில் மண்டபத்தில் தங்க வைத்தார்கள்.பாலஸ்தீன விடுதலை போராளிகளின் பணயக்கைதிகள் தொடர்பான கோரிக்கையை உகண்டாவின் ரொட்டோ உகண்டா வானொலி உலகிற்கு தெரியப்படுத்தியது. 

இஸ்ரேலிய வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்ட போராளிகள் 40 பேரையும் ஜேர்மனியில் உள்ள 5 பேரையும் கென்யாவில் உள்ள 6 பேரையும் சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஒருவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அது.விமானத்தில் உள்ள 100 யூதர்களையும் தம்முடனேயே விமானத்தில் பணயமாக வைத்துக் கொண்டனர். 

இஸ்ரேலிய இராணுவ அரசியல் உயர் மட்ட தலைவர்கள் தளபதி ஜெனரல் குர் தலைமையில் மீட்பு நடவடிக்கை தொடர்பாக திட்டமிட்டனர். என்டபே விமான தளத்தை கைப்பற்றி போராளிகளை கொல்வதுடன் பயணிகளை மீட்பதென திட்டம் தீர்மானிக்கப்பட்டு செயற்படுத்த அனுமதியளிக்கப் பட்டது.

அன்றைய பிரதமர் இட்ஸாக் ரொபின் தாக்குதலிற்கு தயங்கிய போதும் பாதுகாப்பு அமைச்சர் ஸிமோன் பெரஸ் தாக்குதலை தவிர வேறு வழியில்லை என்பதில் உறுதிபட நின்றார்.கொமாண்டோ தாக்குதல் ஒரு வேளை தோல்வியில் முடிந்தால் பயணிகளின் மரணம் பற்றி இஸ்ரேலிய அரசு ஒரு போதும் யோசிக்கவில்லை. 

அது சிந்தித்ததெல்லாம் யூத படையினரின் மற்றும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளது மனோ வல்லமை இதனால் பலவீனமடைந்து விடக்கூடாது என்றே.ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளின் கூட்டுப் படைத்தளபதியாக ஜெனரல் சொம்ரோன் (Brigadier General Shomron) நியமிக்கப்பட்டார். 

திட்டம் பரீட்சார்த்தமாக செயற்படுத்தி பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அதை முப்படைத் தளபதிகள் மொசாட் இயக்குனர் பாதுகாப்பு அமைச்சர் போன்ற உயர்மட்ட அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற விவாதத்தின் பின்பே இறுதி உத்தரவு வழங்கப்பட்டது. 

சார்ம் எல் செய்க் எனும் விமான தளத்தில் இருந்து மீட்பு நடவடிக்கைக்கான விமானம்யூலை 4ம் திகதி புறப்பட்ட தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.கள அனுபவமிக்க 200 முதல் நிலை கொமாண்டோக்கள் தளத்திற்கு வரவளைக்கப்பட்டு முகாமினுள்ளே முடக்கி வைக்கப்பட்டனர். அவர்கள் இருந்த முகாமிற்கான அனைத்து போக்குவரத்து தொடர்பாடல் வசதிகளும் துண்டிக்கப்பட்டது. காரணம் தாக்குதல் இரகசியம் வெளிச்செல்லாமல் இருக்க.இஸ்ரேலிய ஸ்தானிகராலயங்கள் உலகை சார்ம் எல் செய்க் விமான நிலைய பக்கம் திசை திரும்பி விடாமல்இருக்க பாலஸ்தீன போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடாத்த தயார் என பாசாங்கு காட்டி கால நேரத்தை வீரயப்படுத்திக் கொண்டிருந்தது.

இறுதி நிமிடத்திலேயே இஸ்ரேலின் ஏனைய உளவு இராஜதந்திர அமைப்புகளிற்கு கொமாண்டோ தாக்குதல் பற்றி அறிவிக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒரு புள்ளியில் நெறிப்படுத்த ஒருங்கினைக்கப்பட்டன.உகண்டா அதிபர் இடியமீன் உபயோகப்படுத்திய கறுப்புநிற கார் மற்றும் அவரிற்கு பாதுகாப்பு வழங்கும் லேன்ட் ரோவர் போன்றவற்றினதும் என்டபே விமான தளத்தினதும் புகை படங்களை மொசாட் துரிதமாக வழங்கியது.

பாரிஸ் திரும்பிய யூதரல்லாத பயணிகளிடத்தில் விமானத்தை கடத்தியவர்கள் தொடர்பான பலதரப்பட்ட வேவுத் தகவல்களை பிரான்ஸில் உள்ள யூத லொபிகள் மூலமாக துல்லியமாக சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் வழங்கப்பட்டது. 

அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹேர்கூலிஸ் ரக விமானத்தில் தலைமை கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக ஜெனெரல் அடம் (General Adm. Commanding Chief Officer) களமிறக்கப்பட்டார்.விமானத்தள தாக்குதல் அணிகளிற்கு பொறுப்பாக லெப்டினன்ட் கேர்ணல் யோனி (Lt. Colenel Yoni) களமிறக்கப்பட்டார்.

யோனி தலைமையிலான தாக்குதல் அணி என்டபேயின் விக்டோரியா நதியை கடந்து கால் நடையாக விமான நிலைத்தினுல் புக வேண்டும். பயணிகள்தங்குமிடத்தையும் விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தையும் எரிபொருள் நிரப்பு மையத்தையும் துப்பாக்கி ரவைகள் தீர்க்கப்படாமல் கைப்பற்றுவதே திட்டத்தின் உயிர் நாடி.

இன்னொரு அணி கவச வாகனங்கள் சகிதம் பின் புலத் தாக்குதலை தாமதித்து தொடங்குவது. இவர்கள் உகண்டா இராணுவ சீருடை அணிந்து காணப்பட்டனர். கூடவே உகண்டா இராணவத்தின் தொடர்பாடலை சீர்குலைப்பது. ஹெர்குலிஸ் கட்டளை மையத்துடன் மட்டும் தொடரான சிக்னல்களை பேணுவது.

மூன்றாவது அணி பூனை நகர்வின் அடிப்படையில் விமான ஓடு தளங்களில் பதுங்கியிருந்து தாக்குதல் நடாத்துவதற்கான நிலைகளை எடுப்பது. குறிபார்த்து சுடும் வீரர்களை கொண்ட பரா இன்பன்டரி பிரிவினர் இதில் இருந்தனர்.இதைவிட 

நான்காவது அணி எதையும் செய்ய தயார் நிலையில் துணைப்படையாக களமிறக்கப்பட்டது. அழிவி நாச தாக்குதலிற்கான ஆயத வசதியை கொண்ட அணியாக இது வடிவமைக்கப்பட்டு இருந்தது.

விமான நிலையத்தில் தரையிறங்கும் போக்குவரத்து மற்றும் பயணிகள் விமானங்களின் நேர சூசிகை ஆராயப்பட்டு பிரிட்டிஸ் கார்கோ விமானம் தரையிறங்கும் அதே வேளை அதன் இரைச்சலோடு இரைச்சலாக விமான விளக்குகள் அணைக்கப்ட்ட நிலையில் முதலாவது ஹேர்குலிஸ் தாக்குதல் அணி விமானம் தரையிறங்க வைக்கப்பட்டது. 

இதற்கு ஆதரவாக பிரித்தானிய கார்க்கோ விமானி விமான நிலைய அதிகாரிகளை லாவகமாக ஏமாற்றி கவனத்தை திசை திருப்பினார்.விமான நிலைய இருட்டுப் பகுதியில் ஹேர்குலிஸை செலுத்தி அதனுல் இருந்த மேர்ஸிடஸ் பென்ஸ் காரில் உகண்டா அதிபர் இடி அமீ்ன் போல் வேடமிட்டவரை அமர்த்தி அதன் தொடராய் பாதுகாப்பிற்கான வாகன தொடரணி எனும் போர்வையில் கொமாண்டோ தாக்குதல் அணிகள் மெதுவாக முன் நகர்ந்தன.

விமான டேர்மினலில் இஸ்ரேலிய பயணகைதிகளை தளம் மாற்றிய போராளிகளை இலக்கு வைத்து தாக்குதல் அணிகள் முன் நகர்ந்து 50 யார் இடைவெளியில் வைத்துமுதல் மின்னல் வேக தாக்குதலை ஆரம்பித்தனர்.30 நொடிப்பொழுதுகளினுள்ளே 4 பலஸ்தீன போராளிகளை சுட்டுக் கொன்று விட்டு சடுதியாக உள்நுளைந்தனர். 

பயணக்கைதிகளை நிலத்தில் குப்புற படுக்குமாறு உத்தரவிடப்பட்டது.தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெண் போராளியாவார். மொத்தம் 13 போராளிகளும் 35 உகண்டா இராணுவத்தினரும் கெல்லப்பட்டனர்தாக்குதலை வழி நடாத்திய கேர்ணல் யோனியின் கழுத்தில் தவறுதலாக பாய்ந்த குண்டொன்று பலத்த காயம் காரணமாக பின்பு அவரது விதியை முடித்தது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3வது விமானம் தரையிறங்கி மீட்பு அணியினரை தரையிறக்கியது. 

இஸ்ரேலிய கவசவாகன தாக்குதலின் முன் உகண்டாவின் ரைபிள்கள் மொளனித்துப்போயின.பயணிகளுடன் விமானம் கிளம்பி நைரோபியில் எரிபொருளை நிறைத்துக் கொண்டு டெல் அவிவ் நோக்கி பறந்தது. இவையெல்லாமே 57 நிமிடங்களுள் நடத்தி முடிக்கப்பட்டது. 

பயணிகள் விமானம் புறப்பட்ட அடுத்த 42 நிமிடங்களுள் வந்த சுவடு தெரியாமல் ஏனைய ஹேர்குலிஸ் விமானங்களும் புறப்பட்டுச் சென்றன.உகண்டாவின் ஆகாய படையின் மிக் 21 விமானங்கள் தாக்குதல் நடாத்த முற்பட்டாலும் அவை உரிய பலனை அளிக்கவில்லை. 

விமானத்தில் இருந்த 100 பயணிகளில் 99 பேரை உயிருடன் மீட்டு உலகையே அதிசயத்துடனும் பயத்துடனும் இஸ்ரேலை பார்க்க வைத்த இராணுவ நடவடிக்கை இது.